நகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு வழிப்பாதை
விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, விரைவில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி
விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, விரைவில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரிக்கு வார இறுதிநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். இவர்கள் பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வருவதால் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், கீர்த்திவாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசியதாவது:-
விரைவில் ஒருவழிப்பாதை
விடுமுறை நாட்களின்போது போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒருசில இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலமாக இருப்பதால் புதுவைக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒருசில வீதிகளில் ஒரு வழிப்பாதையாகவும், வாகனங்களை ஒருபுறம் மட்டும் 'பார்க்கிங்' செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி புஸ்சி வீதியில் ஒரு வழிபாதையாகவும், ஆம்பூர் (கிழக்கு பகுதியிலும்), செஞ்சி சாலையில் (மேற்கு பகுதியிலும்) வாகனங்களை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை சோதனை அடிப்படையில் விரைவில் அமல்படுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.