ரூ.24½ கோடியில் 5 புதிய திட்டப்பணிகள்


ரூ.24½ கோடியில் 5 புதிய திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 27 Aug 2023 10:54 PM IST (Updated: 27 Aug 2023 11:46 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 5 இடங்களில் ரூ.24½ கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி

புதுச்சேரி தமிழக எல்லை பகுதியான பிள்ளைச்சாவடிமீனவ கிராமத்தில் கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் அங்குள்ள மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தடுப்பு சுவர்

மீன்வர்களுடைய வீடுகள், வலை பின்னும் கூடம் போன்றவை பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மீனவ கிராம மக்கள் தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து புதுவை அரசு பொதுப் பணித்துறை சார்பில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனை பெற்று பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் கடலோரத்தில் ரூ.6 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரத்து 554 செலவில் தடுப்பு சுவர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ரங்கசாமி தொடங்கி வைத்தார்

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் 6 தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட உள்ளது. 50 மீட்டர் நீளத்திற்கு ஒரு சுவரும், 40 மீட்டர் நீளத்திற்கு 2 சுவர்களும், 30 மீட்டர் நீளத்திற்கு 2 சுவர்களும், 20 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்பு சுவரும் இடைவெளி விட்டு அமைக்கப்பட உள்ளது. அதில் 2 டன் முதல் 10 கிலோ எடை வரை உள்ள கருங்கற்கள் 3 அடுக்குகளாக கொட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

பிள்ளைச்சாவடியில் கடல் மண் அரிப்பை தடுக்கும் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கான தொடக்க விழா இன்று காலை பிள்ளைச்சாவடி கடற்கரையில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார்.

கான்கிரீட் சாலை

இதே போல் புதுச்சேரி விமான நிலைய நுழைவாயில் முதல் இடையஞ்சாவடி வரை ரூ.3 கோடியில் பக்கவாட்டு கால்வாயுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, முதலியார்பேட்டை சுதானா நகர் பகுதியில் குடிநீர் வினியோக குழாய்கள், நீர் உந்து குழாய்கள், சாலை மறுசீரமைப்பு பணி என ரூ.12 கோடியே 98 லட்சம் செலவில் மேற்கொள்ளும் பணி.

அரியாங்குப்பத்தில் இருந்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் வரை சாலையில் ரூ.48 லட்சத்து 28 ஆயிரம் செலவில் சாலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி, அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு பகுதியில் ரூ.1 கோடியே 59 லட்சம் செலவில் பழுதடைந்த நீர் பங்கீட்டு குழாய்கள் மாற்றி அமைத்து சாலைகள் மறுசீரமைக்கும் பணி ஆகியவற்றை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமிபூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.

ரூ.24½ கோடி

இதன் மூலம் இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் 5 இடங்களில் ரூ.24½ கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் இத்திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் சம்பத், பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி, தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story