பராமரிப்பு இல்லாத 30 பள்ளி, கல்லூரி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன


பராமரிப்பு இல்லாத 30 பள்ளி, கல்லூரி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
x

பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் முறையான பராமரிப்பு இல்லாத 30 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

புதுச்சேரி

பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் முறையான பராமரிப்பு இல்லாத 30 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கான சிறப்பு முகாம் புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 2 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல்நாள் முகாம் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரில் இன்று நடந்தது.

திருப்பி அனுப்பப்பட்டன

புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சீத்தா ராமராஜூ, பிரசாத் ராவ், ஆய்வாளர்கள் ரமேஷ், தட்சிணாமூர்த்தி, சீனிவாசன், சண்முகநாதன், பாலசுப்ரமணியன், உதவி ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோர் 6 குழுக்களாக வாகனங்களை ஆய்வு செய்தனர்.

நேற்றைய ஆய்வுக்கு 230 வாகனங்கள் வந்திருந்தன. அவற்றில் 30 வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதைத்தொடர்ந்து அவற்றுக்கு அனுமதி வழங்காத அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு திருப்பி அனுப்பினார்கள். இன்றும் சிறப்பு முகாம் நடக்கிறது.

புதுவையை பொறுத்தவரை 908 வாகனங்கள் மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி பெற்றுள்ளன. தொடர்ந்து அந்த வாகனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.

அமைச்சர் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்த சுமார் 90 வேன், பஸ்களை ஆய்வு செய்யும்பணி நேற்று தொடங்கியது. புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் முதல் கட்டமாக 32 வேன் மற்றும் பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர் ஆதர்ஷ், வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story