மாகியில் 25-ந்தேதி பள்ளிகள் திறப்பு
புதுவை மாகி பிராந்தியத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகள் வருகிற 25-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
மாகி
புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியத்தை ஒட்டிய கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரசால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக மாகி பிராந்தியத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நிபா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் வருகிற 25-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என்றும், உள்விளையாட்டு அரங்கமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணியவேண்டும் என்றும் பொதுமக்கள் கூடுவதற்கான கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்படுவதாகவும் மாகி மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா தெரிவித்துள்ளார்.