புதுச்சேரிக்கு ரூ.2,328 கோடி சிறப்பு நிதி


புதுச்சேரிக்கு ரூ.2,328 கோடி சிறப்பு நிதி
x

சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்ற புதுச்சேரிக்கு ரூ.2,328 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி

சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்ற புதுச்சேரிக்கு ரூ.2,328 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முழு பட்ஜெட்

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தங்களின் (மோடி) தலைமையிலான அரசு 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதற்கு புதுவை மாநில மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசின் தொடர் ஆதரவால் புதுவையில் 12 ஆண்டுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்துள்ளது.

இரட்டை என்ஜின் வேகத்தோடு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை புதுவை மக்களுக்காக செய்து வருகிறது.

ரூ.2,328 கோடி நிதி

தாங்கள் வந்தபோது 'பெஸ்ட்' புதுவையை உருவாக்க வேண்டும் என விரும்பியதை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் கூறியபடி ஆன்மிகம், சுற்றுலா, வணிகம், கல்வி ஆகியவற்றில் தன்னிறைவு பெற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாடுபட்டு வருகிறது.

அனைத்து அம்சங்களிலும் புதுவையை சிறந்த மாநிலமாக மாற்றுவது கடினமாக உள்ளது. புதுவையை சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்றவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.2 ஆயிரத்து 328 கோடி சிறப்பு நிதி தேவைப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.425 கோடியும், ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க ரூ.420 கோடியும், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடியும், மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ.500 கோடியும், தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்க ரூ.483 கோடி என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 328 கோடி தேவைப்படுகிறது.

தனிகணக்கு

புதுவையை மத்திய நிதியின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டி உள்ளது. புதுச்சேரிக்கு கடந்த 2007-ம் ஆண்டு மத்திய உள்துறை மற்றும் நிதி துறையின் அறிவுறுத்தலின்படி தனி கணக்கு தொடங்கப்பட்டது. இதனால் வெளி மார்க்கெட்டில் கடன் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டது.

யூனியன் பிரதேசங்களுக்கு 90-10 என்ற அடிப்படையிலும் சில திட்டங்களுக்கு 100 சதவீதம் நிதியும் மத்திய அரசு வழங்கப்படுகிறது. இதேபோல் புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்.

மத்திய நிதிக்குழு

தனி கணக்கு என்பதால் கல்வி சுகாதாரம் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை பெற அதிக வட்டியில் கடன் பெற வேண்டி உள்ளது. இதனால் நிதி சுமை ஏற்படுகிறது. இதை தவிர்க்க மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 328 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும். இதற்காக மத்திய நிதி குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். ஜம்மு, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உதவி திட்டங்களுக்கு இணையாக புதுவைக்கும் நிதி வழங்க வேண்டும்.

மத்திய அரசு பங்களிப்பு திட்டங்களில் 90 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் என நிதி முறையை திருத்தம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவும், புதுவை மக்களின் நலன் கருதி முன்னுரிமை அடிப்படையில் நிதி பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story