முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பாகூர்
வெவ்வேறு விபத்துகளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
முன்னாள் ராணுவ வீரர்
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 71). முன்னாள் ராணுவ வீரர். அவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சம்பவத்தன்று மணி விவசாய நிலத்துக்கு சென்று விட்டு கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மணி பரிதாபமாக இறந்தார்.
விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாகனம் மோதி பலி
லாஸ்பேட்டை, ஜீவரத்தினபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 50). காட்டுக்குப்பம் அடுத்த வார்க்கால் ஓடை கிராமத்தில் உள்ள கொசுவர்த்தி கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு பணிக்காக வீட்டில் இருந்து கிளம்பினார். காட்டுக்குப்பம் பஸ்நிறுத்தத்தில் இறங்கி கம்பெனிக்கு நடந்து சென்றார். ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்துகள் தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.