போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 பேர் கைது
தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக புதுவையில் போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக புதுவையில் போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கலால் போலீசார் ரோந்து
புதுவையில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் மற்றும் எரி சாராயம் கடத்தப்படுவதை தடுக்க கலால்துறை தாசில்தார் சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் வில்லியனூர் வி.மணவெளி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் கூண்டு கட்டிய மினி சரக்கு வாகனம் ஒன்று பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த சரக்கு வாகனம் யாருடையது என கலால் போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அந்த வாகனத்தை யாரும் உரிமைக்கோரவில்லை.
2 பேர் கைது
இதையடுத்து அந்த வாகனத்தின் கூண்டின் பூட்டை உடைத்து பார்த்தனர். அதில், 10 கேன்களில் 380 லிட்டர் எரி சாராயம், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபாட்டில்கள், மதுபானம் தயாரிக்கும் எந்திரம் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாகனத்தை புதுவை கலால்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் மரக்காணம் அனுமந்தை செட்டியான்குப்பம் ராஜசேகர் (வயது 55), புதுவை கீழ்அக்ரகாரம் செந்தில்குமார் (22), ஒதியம்பட்டை சேர்ந்த சீனு (23) ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார், சீனு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பட்டதாரி ஆவார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுவையில் போலி மதுபாட்டில்கள் தயாரித்து தமிழகத்தில் விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜசேகர் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.