வணிக திருவிழாவில் ரூ.2½ கோடிக்கு பரிசுகள்
புதுவை வணிக திருவிழாவில் ரூ.2½ கோடிக்கு பரிசு வழங்குவது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுவை வணிக திருவிழாவில் ரூ.2½ கோடிக்கு பரிசு வழங்குவது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
உயர்மட்டக்குழு கூட்டம்
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வணிக திருவிழா வருகிற 5-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிக திருவிழாவின் முதலாவது உயர்மட்டக்குழு கூட்டம் புதுவை வர்த்தக சபையில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், செயலாளர் குமார், இயக்குனர் பிரியதர்ஷினி, வர்த்தக சபை தலைவர் குணசேகரன் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
அரசின் பங்களிப்பு
*வணிக திருவிழாவை வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி யிலிருந்து பிப்ரவரி 20-ந்தேதி வரை நடத்துவது.
*பரிசுக்கூப்பன் ஒன்றின் விலை ரூ.10 என நிர்ணயிப்பது.
*கடைகள் விழாவில் பங்கேற்க பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஜி.எஸ்.டி. என நிர்ணயிக்கப்பட்டது.
*விழாவின் செலவுக்காக அரசின் பங்களிப்பு ரூ.60 லட்சம்.
*தலைமை அனுசரணை கட்டணம் (ஸ்பான்சர்) ரூ.15 லட்சம், இணை அனுசரணை கட்டணம் ரூ.5 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
ரூ.2½ கோடி பரிசு
*விழாவில் பம்பர் பரிசாக ஒருவருக்கு 75 சவரன் தங்க நாணயம், முதல் பரிசாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள 20 கார்கள், 2-வது பரிசாக ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 40 ஸ்கூட்டர்கள், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 200 செல்போன்கள், 4-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சமையலறை பொருட்களை 2 ஆயிரம் பேருக்கு வழங்குவது, ஆறுதல் பரிசாக ரூ.1,000 மதிப்புள்ள பொருட்களை 20 ஆயிரம் பேருக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.
கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிடங்கள் தொடர்பாக தங்களது குறைகளை தெரிவித்தனர். அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதியளித்தார்.