நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டிய காதலன்; ரூ.2.5 கோடியை இழந்த இளம்பெண்
நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டி காதலியிடம் இருந்து ரூ.2.5 கோடி பணத்தை பறித்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், தனது பள்ளி தோழன் மோகன் குமார் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து பல்வேறு ஊர்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மோகன் குமார் அந்த பெண்ணிடம் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று உறுதி அளித்துள்ளார்.
இதனை நம்பிய அந்த இளம்பெண், மோகன் குமாருடன் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் மோகன் குமார், இந்த செயலை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் அந்த வீடியோக்களில் தனது முகம் தெரியாதவாறு கவனமாக இருந்துள்ளார். இதன் பிறகுதான் மோகன் குமாரின் உண்மையான முகம் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
இதுவரை பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்கள் அனைத்தையும் காட்டி இளம்பெண்ணை மிரட்டிய மோகன் குமார், அந்த விடியோக்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், தனக்கு தேவைப்படும்போதெல்லாம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் இருந்து ரகசியமாக பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார்.
இதன்படி சுமார் ரூ.2.5 கோடி பணத்தை மோகன் குமாருக்கு இளம்பெண் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சொகுசு கார், விலையுயர்ந்த வாட்சுகள், நகைகள் உள்பட பல பொருட்களை மோகன் குமாருக்கு அந்த பெண் வாங்கி கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த அந்த பெண், இறுதியாக இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மோகன் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.80 லட்சத்தை மீட்டுள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.