திருமணத்துக்கு மறுத்த காதலனை கத்தியால் குத்திய இளம்பெண் கைது


திருமணத்துக்கு மறுத்த காதலனை கத்தியால் குத்திய இளம்பெண் கைது
x
தினத்தந்தி 2 Jan 2025 5:43 PM IST (Updated: 2 Jan 2025 5:48 PM IST)
t-max-icont-min-icon

கோபமடைந்த பவானி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனுகுமாரை சரமாரியாக குத்தி உள்ளார் .

ஹாசன்,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஏ.குடுகனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மனுகுமார்(வயது 25). இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவானி(25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் பி.யூ. கல்லூரியில் படிக்கும் போதிருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பவானியுடன், மனுகுமார் சரியாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் திருமண பேச்சை எடுத்தால் அதுபற்றி இப்போது பேச வேண்டாம் என்று கூறி மறுத்து வந்தார். அதுமட்டுமின்றி செல்போனில் பவானி அழைத்தாலும் அதை மனுகுமார் எடுத்து பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனிடையே நேற்று இரவு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவு 12.30 மணிக்கு மனுகுமாரை அவரது நண்பர்கள் அழைத்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பவானி வந்துள்ளார். பின்னர் இருவரும் தனி ஒரு அறையில் அமர்ந்து தங்களது காதல் விவகாரம் குறித்தும், திருமணம் குறித்தும் பேசினர். அப்போது மனுகுமார் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த பவானி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனுகுமாரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மனுகுமாரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து படாவனே போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.


Next Story