தேர்தல் முடிந்ததால் தமிழையும் தமிழ்நாட்டையும் மறந்துவிட்டீர்கள் - தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ
தேர்தல் முடிந்து விட்டதால் தமிழையும், தமிழ்நாட்டையும் பிரதமர் மோடி மறந்துவிட்டதாக தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
புதுடெல்லி,
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ கூறியதாவது:-
தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்ததால் தமிழையும், தமிழ்நாட்டையும் மறந்துவிட்டீர்கள். சமீபகாலமாக பலர் செங்கோலைப் பற்றி பேசுகின்றனர். நீங்கள் உண்மையிலேயே திருக்குறளை படித்தால் அதில் செங்கோல், கொடுங்கோல் இரண்டையும் காணலாம். நீங்கள் நல்ல ஆட்சியை கொடுத்தால் மட்டுமே அதற்கு பெயர் செங்கோல். மோசமான ஆட்சியை கொடுத்தால் அதற்கு பெயர் கொடுங்கோல்.
நீங்கள் யார் என்பதை பட்ஜெட் மற்றும் உங்களின் அணுகுமுறை காட்டுகிறது. உங்களுடைய ஆட்சி செங்கோல் ஆட்சியா? அல்லது கொடுங்கோல் ஆட்சியா? என்பதை இந்திய மக்கள் முடிவு செய்வார்கள். எங்களைப் பொறுத்தவரை உங்களுடைய ஆட்சி கொடுங்கோல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.