அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் யாகம்


அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் யாகம்
x

Image Courtesy : ANI

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் 11 நாட்கள் யாகம் நடத்தப்படுகிறது.

ஐதராபாத்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் (59) களமிறங்கி உள்ளார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் கருப்பின, ஆசிய அமெரிக்க பெண் துணை ஜனாதிபதி ஆவர். எதிர்வரும் அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரலாற்று பெருமைக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார். கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் 11 நாட்கள் யாகம் நடத்தப்படுகிறது. தெலுங்கானாவில் உள்ள பத்ராதி கோராகுடம் பகுதியில் சியாமலா கோபாலன் என்ற அமைப்பு சார்பில் இந்த யாகம் நடத்தப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட யாகம் இன்றோடு நிறைவு பெறுகிறது. வேத பண்டிதர்களால் நடத்தப்பட்ட இந்த யாகத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.


Next Story