உலக செஸ் சாம்பியன்: குகேஷுக்கு அமித் ஷா வாழ்த்து
18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
புதுடெல்லி ,
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில், நேற்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
இந்த நிலையில் , சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷுக்கு வாழ்த்துகள் .உங்கள்நேர நகர்வுகள் மற்றும் வெற்றி பெறுவதற்கான உறுதியான தீர்மானம் ஆகியவற்றால் நீங்கள் இன்று உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள். உங்கள் வெற்றி தேசத்தின் பெருமையை உயர்த்த , நமது இளம் மேதைகளுக்கு தங்கப் பாதையை அமைத்துள்ளது.என தெரிவித்துள்ளார்.