காங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் புறக்கணிப்பு - பிரதமர் மோடி


காங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் புறக்கணிப்பு  - பிரதமர் மோடி
x

ஜார்க்கண்ட்டில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் தற்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. முதல்-மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக நவம்பர் 13, நவம்பர் 20ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மீண்டும் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பொகாரோ என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2004-2014ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட்டிற்கு ரூ.80,000 கோடி மட்டுமே ஒதுக்கீடூ செய்யப்பட்டது. பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஜார்க்கண்ட்டிற்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கி உள்ளோம். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். காங்கிரஸ், ஜே.எம்.எம்., கட்சிகள் இணைந்து மாநிலத்தை கொள்ளையடிக்கின்றன.காங்கிரஸ் ஆட்சியில் ஜார்க்கண்ட் புறக்கணிக்கப்பட்டது.

இங்கு நடந்த சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஊழல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்கள் பணம் உங்களுக்காக மட்டுமே செலவிடப்படும். ஜார்க்கண்ட்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைப்பவர்களின் திட்டங்களை பாஜக முறியடிக்கும். ஜார்க்கண்டை உருவாக்கியவர்கள் நாங்கள். அதன் வளமான எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story