மஹுவா மொய்த்ரா அழித்த அவதூறு வாசகம் என்ன...? எக்ஸ் சமூக ஊடகத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்


மஹுவா மொய்த்ரா அழித்த அவதூறு வாசகம் என்ன...? எக்ஸ் சமூக ஊடகத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்
x
தினத்தந்தி 8 July 2024 2:25 PM GMT (Updated: 8 July 2024 2:50 PM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, தேவைப்பட்டால், வருகிற நாட்களில் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி ஒன்று கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின்னர், தேசிய மகளிர் ஆணைய தலைவராக உள்ள ரேகா சர்மா, கடந்த 4-ந்தேதி அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, எக்ஸ் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அந்த வீடியோவில், சர்மா சம்பவ பகுதிக்கு செல்லும் காட்சிகள் உள்ளன. அவருக்கு பின்னால் நபர் ஒருவர் குடையை பிடித்தபடி செல்கிறார். அந்த வீடியோவை பின்னர் நீக்கி விட்டார். இந்நிலையில், மொய்த்ராவுக்கு எதிராக டெல்லி போலீசார் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

பாரதீய நியாய சன்ஹித சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. இதன்படி, ஒரு பெண்ணுக்கு எதிராக அவரை புண்படுத்தும் நோக்கில் வார்த்தை அல்லது செயல் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், மொய்த்ரா நீக்கிய பதிவை கேட்டு, எக்ஸ் சமூக ஊடகத்திற்கு டெல்லி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இந்த பதிவுகள் விசாரணைக்கு தேவையாக உள்ளன. பதிவுகள் பற்றிய சான்றுகளை விசாரணை அதிகாரிகள் முன்பே சேகரித்து விட்டனர் என்றபோதிலும், இது விசாரணைக்கு வேண்டியுள்ளது. தேவைப்பட்டால், வருகிற நாட்களில் மொய்த்ரா அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என அதுபற்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, காவல் ஆணையாளருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெண்களின் உரிமைகளை இழக்க செய்வதுடன் தொடர்புடைய விசயங்களை கண்காணிக்கவும் மற்றும் அவற்றை கவனிக்கவும் இந்த ஆணையம் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், ஆணையம் உள்ளது என எப்.ஐ.ஆர். பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று காவல் அதிகாரி கூறியுள்ளார்.

மொய்த்ராவின் அவதூறு பதிவுகளை தானாக முன்வந்து ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளது. மொய்த்ரா பேசிய கொச்சையான விசயங்கள், கண்ணியத்துடன் வாழ கூடிய பெண்களின் உரிமையை மீறக்கூடிய செயலாகும் என எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது.


Next Story