மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்


தினத்தந்தி 16 Aug 2024 6:58 AM GMT (Updated: 16 Aug 2024 12:57 PM GMT)

இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் (முதுநிலை மருத்துவ மாணவி) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறுகின்றன.

Live Updates

  • 16 Aug 2024 7:40 AM GMT

    பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொல்கத்தா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, புதன்கிழமை நள்ளிரவில் ஒரு கும்பல் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது. மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. தாக்குதலில் போலீஸ்காரர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

    இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 22-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 16 Aug 2024 7:32 AM GMT

    மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தின் திருச்சி, சேலம் மற்றும் அரியலூரில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 16 Aug 2024 7:17 AM GMT

    மருத்துவமனை மீது தாக்குதல்- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    பெண் பயிற்சி டாக்டருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில், புதன்கிழமை நள்ளிரவில் ஜி.ஆர். கார் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென புகுந்த மர்ம கும்பல் மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. இந்த வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. போராடும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    வன்கொடுமைக்கு ஆளான பெண் டாக்டரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாது என்று ஊடகங்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

  • 16 Aug 2024 7:03 AM GMT

    போலீஸ்-கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மோதல்

    பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (கம்யூனிஸ்ட்) தொண்டர்கள் இன்று கொல்கத்தாவில் பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

  • 16 Aug 2024 7:00 AM GMT

    சி.பி.ஐ.க்கு மம்தா கெடு

    பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு மேற்கு வங்காளத்தில் இன்று மாலையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெறுகிறது.

    குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைப்பதை சி.பி.ஐ. உறுதி செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

    கொல்கத்தா காவல்துறை இந்த வழக்கின் 90 சதவீத விசாரணையை முடித்துவிட்டனர். எனவே, மீதி விசாரணையை சி.பி.ஐ. வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடித்து குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என மம்தா கூறி உள்ளார்.

  • 16 Aug 2024 6:59 AM GMT

    கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவ சங்கம் (IMA) நாடு முழுவதும் 24 மணி நேர அவசர சேவைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. நாளை காலை காலை 6 மணி தொடங்கி நாளை மறுநாள் காலை 6 மணி வரை சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். 

  • 16 Aug 2024 6:58 AM GMT

    பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் இன்று 12 மணி நேர பொது வேலைநிறுத்தத்திற்கு இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (கம்யூனிஸ்ட்) அழைப்பு விடுத்துள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதல் மற்றும் அங்கு சேதம் ஏற்படுத்தியவர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story