பெண் டாக்டர் கொலை விவகாரம்: மருத்துவமனை முன்னாள் முதல்வரின் மருத்துவப்பதிவு ரத்து
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.
தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து சந்தீப் கோஷ் நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சந்தீப் கோஷின் மருத்துவப் பயிற்சி பதிவை ரத்து செய்து மேற்கு வங்காள மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இன்று (செப். 19ம் தேதி) முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மருத்துவ கவுன்சிலால் பராமரிக்கப்படும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்களின் பட்டியலில் இருந்து முன்னாள் முதல்வரின் பெயர் நீக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதன்படி மேற்கு வங்காள மருத்துவச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.