வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி


தினத்தந்தி 31 July 2024 8:11 AM IST (Updated: 1 Aug 2024 1:53 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,


Live Updates

  • 31 July 2024 8:33 AM IST

    பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு

    கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

  • 31 July 2024 8:31 AM IST

    2வது நாளாக தொடரும் மீட்புப்பணி

    கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. 

    வயநாடு நிலச்சரிவு தொடர்பான செய்தி மேலும் படிக்க... நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள்... என்ன நடந்தது வயநாட்டில்? - முழு விவரம்   

  • 31 July 2024 8:13 AM IST

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இதனிடையே, கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக மலைப்பகுதியில் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிவரை அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

    கனமழை, நிலச்சரிவுடன் சாளியாற்றில் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன. மேலும், இரவு, அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

    நிலச்சரிவில் முண்டக்கை , சூரல்மலையை இணைக்கும் பாலம் அடித்து செல்லப்பட்டது. மேலும், 3 பகுதிகளிலும் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மேலும், வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதேவேளை, நிலச்சரிவில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் வீட்டில் இருந்த மக்களும் மண்ணுக்குள் புதைந்தனர்.

    இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை முதல் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், பல்வேறு மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீட்புப்பணியின் முதல்நாளான நேற்று இரவு வரை 126 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 2வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வயநாடு நிலச்சரிவில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்த மேலும் விவரங்களுக்கு... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்


Next Story