நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள்... என்ன நடந்தது வயநாட்டில்? - முழு விவரம்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவு குறித்த அதிர்ச்சி தகவல்கள்:
மலைப்பகுதியில் கனமழை:
வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது.
நிலச்சரிவு:
கனமழை காரணமாக மலைப்பகுதியில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
முண்டக்கை கிராமத்தில் முதல் நிலச்சரிவு:
கனமழை காரணமாக மலைப்பகுதியில் அமைந்துள்ள முண்டக்கை என்ற கிராமத்தில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவு 2 மணி:
முண்டக்கை கிராமத்தில் நள்ளிரவு 2 மணிக்கு கனமழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சாளியாற்றில் வெள்ளம்:
கனமழை காரணமாக சாளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாயும் சாளியாறு பல்வேறு கிராமங்கள், நகரங்கள் வழியாக அரபிக்கடலை அடைகிறது.
நிலச்சரிவு, வெள்ளம்:
கனமழை காரணமாக சாளியாற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை நிலச்சரிவும் ஏற்பட்டு இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது.
சூரல் மலையில் 2வது நிலச்சரிவு:
முண்டக்கை கிராமத்தில் இருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் சூரல்மலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமங்களுக்கு இடையே சாளியாறு பாய்கிறது. அதேவேளை, இந்த கிராமங்களை இணைக்க பாலம் உள்ளது.
அதேவேளை, கனமழை காரணமாக அதிகாலை 4 மணியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முண்டக்கையில் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சூரல் மலையில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை - சூரல்மலை கிராமங்களை இணைக்கும் பாலம் அடித்து செல்லப்பட்டது.
மேப்பாடியில் 3வது நிலச்சரிவு;
முண்டக்கை, சூரல்மலை கிராமங்களை தொடர்ந்து அதிகாலை 6 மணியளவில் மேப்பாடி கிராமத்தில் 3வது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அடித்து செல்லப்பட்ட வீடுகள்:
கடுமையான நிலச்சரிவு மற்றும் சாளியாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சூரல் மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. கிராமங்களில் இருந்த வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
உறங்கிக்கொண்டிருந்த மக்கள்:
மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அடித்து செல்லப்பட்ட மக்கள்:
நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரம் என்பதால் வெள்ளப்பெருக்கில் வீடுகளில் இருந்த மக்கள் அடித்து செல்லப்பட்டனர். மேலும், நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
123 பேர் பலி:
இந்நிலையில், இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சுமார் 100 பேர் மாயம்:
வெள்ளம், நிலச்சரிவில் சுமார் 100 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப்பணிகள்:
வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய வயநாட்டிற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் விரைந்துள்ளனர். மேலும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் களமிறங்கியுள்ளனர். அனைத்து தரப்பினரும் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு:
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்குடன் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவே இந்த பேரழிவுக்கு காரணாக கூறப்படுகிறது.
தொடரும் கனமழை, மீட்பு பணியில் சிக்கல்:
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு:
வெள்ளம், நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்பின் முழு விவரமும் இதுவரை வெளியாகாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.