ஜம்மு-காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
ஜம்மு-காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
ஸ்ரீநகர்,
Live Updates
- 25 Sept 2024 8:49 AM IST
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில்,
"ஜம்மு-காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்கப் போகும் அனைத்து வாக்காளர்களும் பயங்கரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அதிகபட்ச அளவில் திரண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகவும், இந்த இடத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு அரசாங்கத்திற்கு வாக்குகளை பதிவு செய்யுங்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், உறவினர் மற்றும் ஊழலில் இருந்து விடுவிக்கவும் இன்றே வாக்களியுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.
- 25 Sept 2024 8:38 AM IST
ஜம்மு காஷ்மீர் ரைசியில் உள்ள வாக்குச்சாவடியில் 102 வயதான ஹாகி கரம் தின் பட் என்பவர் வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல அரசு அமைந்தால் பல பணிகள் நடக்கும். இளைஞர்களுக்கு நல்ல கல்வி, தொழில்கள் அமைய வேண்டும் என்பதால் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 25 Sept 2024 8:31 AM IST
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்குமாறும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.
- 25 Sept 2024 8:26 AM IST
ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டம் மண்ட்ஹர் தொகுதி தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஜாவித் ரானா பூஞ்ச்சில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
- 25 Sept 2024 7:47 AM IST
2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
2ம் கட்ட தேர்தலில் 27 லட்சத்து 78 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதேவேளை, வாக்களிக்க 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.