வானில் 1.6 லட்சம் ஆண்டுகளுக்கு பின் மிக அரிய நிகழ்வு
விண்வெளி வீரர் டான் பெட்டிட், பூமியின் மேலே இந்த வால் நட்சத்திரம் கடந்து சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
புதுடெல்லி,
வானில் மிக அரிய நிகழ்வாக ஜி3 அட்லஸ் (சி/2024) என்ற வால் நட்சத்திரம் இன்றிரவு அதிக வெளிச்சத்துடன் தோன்றும். அப்போது, சூரியனில் இருந்து 87 லட்சம் மைல்கள் என்ற தொலைவில் அதனை நெருங்கி செல்லும் இந்த வால் நட்சத்திரம் பின்னர் கடந்து செல்லும். இந்த அரிய வாய்ப்பை வானியல் ஆய்வாளர்கள் காணலாம்.
1 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த நிகழ்வு நடைபெறும். முதன்முறையாக, 2024-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. அப்போது, பொலிவின்றி இருந்தது. ஆனால், ஜனவரி 2-ந்தேதி அதில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் இதன் வெளிச்சம் எதிர்பாராத வகையில் அதிகரித்தது. இதனை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், முக்கிய கோள்களான வெள்ளி மற்றும் வியாழன் ஆகியவற்றை விட அதிக பிரகாசத்துடன் இந்த வால் நட்சத்திரம் தென்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இரு தசாப்தங்களில் அதிக வெளிச்சம் கொண்ட ஒன்றாக இது இருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் டான் பெட்டிட், பூமியின் மேலே இந்த வால் நட்சத்திரம் கடந்து சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
சூரியனை மிக நெருங்கி செல்ல கூடிய இந்த வால் நட்சத்திரம் அதிக ஜொலிப்புடன் காணப்படும்போது, நாம் நம்முடைய கண்களால் அதனை காண முடியும். வாழ்நாளில் ஒரு முறையே ஏற்படும் இந்த அரிய நிகழ்வை வாய்ப்புள்ளவர்கள் கண்டு களிக்கலாம்.
பூமியின் தெற்கு பகுதியில் இதனை எளிதில் காணலாம். இதன்படி, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் பெரும் பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் இது பிரகாசத்துடன் தெரியும்.