ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதுபற்றிய விசாரணையில், விதிமீறல்கள் பல இருப்பதால்தான் அரசு மற்றும் ஐகோர்ட்டு உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

ஸ்டெர்லைட் வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை என்றும் கூறினர். இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, வேதாந்தா குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதில், சீராய்வு மனுக்கள் தெளிவாக படிக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு விதிகள் 2013-ன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, சீராய்வு செய்வதற்கு என வேறு வழக்கு எதுவும் இல்லை. அதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த பிப்ரவரி 29-ந்தேதி, ஆலையை திறக்க கோரி அந்த குழுமம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளூர் மக்களின் சுகாதாரம் மற்றும் நலன் ஆகியவையே முக்கியத்துவம் வாய்ந்தது என கூறி, ஆலையை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இந்த சூழலில், அந்த குழுமத்தின் சீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை முன்னிட்டு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் 13 பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், 2018 மே மாதம் ஆலையை மூடும்படி உத்தரவிடப்பட்டது.


Next Story