திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்
வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை,
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 10 முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்துக்காக ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 23-ந்தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மேலும் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மார்ச் மாதத்துக்கான ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. மார்ச் மாதத்துக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
அதேபோல் மார்ச் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் ஒதுக்கீடு அன்றைய தினம் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
இந்த மாற்றத்தைக் கண்டு, பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in -ல் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.