யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா
பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் உள்ள நிலையில் யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி,
யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்திருக்கிறார். மனோஜ் சோனி தனது ராஜினாமா கடிதத்தை ஒரு மாதத்திற்கு முன்பே ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்கும் பட்சத்தில் உடனடியாக அவர் பதிவியில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017-ல் யு.பி.எஸ்.சி ஆணையத்தில் உறுப்பினராக சேர்ந்த மனோஜ் சோனி, கடந்த ஆண்டு மே 16ம் தேதி அன்று யு.பி.எஸ்.சி தலைவராக பதவியேற்று கொண்டார். இவரது பதவிக்காலம் வரும் 2029ம் ஆண்டு முடிவடைகிறது. ஆனால் சமீபத்தில், பயிற்சி ஐ.ஏ.எஸ். புஜா கேத்கர் சர்ச்சைக்கு மத்தியில் பதவிக்காலம் முடிய இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.
மேலும் குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் பிரிவின் கிளையான அனுபம் மிஷ்னில் தொண்டு செய்ய மனோஜ் சோனி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.