ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் அமளி; கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


தினத்தந்தி 6 Nov 2024 2:16 PM IST (Updated: 6 Nov 2024 2:26 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 4-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. வஹீத் பாரா, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்டசபை உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய தினம் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் 15 நிமிடங்களுக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது மீண்டும் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சபாநாயகர் அப்துல் ரஹீம், கூட்டத்தொடரை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.


Next Story