காதலியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே விஷம் குடித்து தற்கொலை செய்த டெய்லர்

காதலியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே டெய்லர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் அல்தாப் (வயது 30). இவர் கடந்த 15 ஆண்டுகளாக மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார்.
அதேவேளை, அல்தாப்பும் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பீபர் ஹிரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, அல்தாப்பிற்கும், அவரது காதலிக்கும் இடையே கடந்த மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கருத்துவேறுபாடு முற்றிய நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி தானேவில் உள்ள வாடகை வீட்டில் இருந்தபடி தனது காதலிக்கு அல்தாப் வீடியோ கால் செய்துள்ளார்.
வீடியோ காலில் காதலியிடம் பேசியபடியே அல்தாப் விஷம் குடித்துள்ளார். மேலும், தனது கையை கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர், அந்த வீடியோவையும் பதிவு செய்து காதலிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
விஷம் குடித்ததில் அல்தாப் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட அல்தாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேவேளை, அல்தாப் தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 2 லட்ச ரூபாய் தரும்படி, அல்தாப்பிடம் அவரது காதலி தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்த தற்கொலை செய்துகொண்டதாகவும் அல்தாப்பின் சகோதரி ரேஷ்மா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அல்தாப்பின் காதலிக்கு எதிராகவும் ரேஷ்மா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.