பால் தாக்கரேவை அவமதித்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்திருக்கிறார்: அமித் ஷா தாக்கு


பால் தாக்கரேவை அவமதித்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்திருக்கிறார்: அமித் ஷா தாக்கு
x

முரண்பாடுகளுக்கு மத்தியில், கூட்டணி ஆட்சி அமைக்கும் கனவோடு களமிறங்கியவர்களை மராட்டிய மக்கள் அறிந்து கொண்டால் நல்லது என அமித் ஷா கூறினார்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் வருகிற 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பால் தாக்கரேவையும் சாவர்க்கரையும் அவமதித்தனர். அந்த கட்சியுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்து பக்கபலமாக நிற்கிறார்.

உத்தவ் தாக்கரே அவர்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், 'வீர சாவர்க்கரைப் பற்றி இரண்டு நல்ல வார்த்தைகளை பேசும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் உங்களால் கேட்க முடியுமா?'

பால் தாக்கரேவை கவுரவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் யாராவது சில வார்த்தைகள் பேசுவார்களா? இது போன்ற முரண்பாடுகளுக்கு மத்தியில், கூட்டணி ஆட்சி அமைக்கும் கனவோடு தேர்தலில் களமிறங்கியவர்களை மராட்டிய மக்கள் அறிந்து கொண்டால் நல்லது.

உலமாக்களின் அமைப்பு சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கோரியுள்ளது. அதை மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆமோதிக்கிறார்.

ஆனால், மராட்டிய மக்கள் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.க்களுக்கான இடஒதுக்கீட்டின் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு ஆதரவாக இருக்கிறார்களா?

நமது அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. இருப்பினும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவ்வாறு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. மக்கள் இந்த பிரச்சினையை அறிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மராட்டிய தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.


Next Story