சர்க்கரை ஆலையில் சல்பர் டேங்க் வெடித்ததில் 2 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் சல்பர் டேங்க் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பார்த்தூர் பகுதியில் பாகேஸ்வரி சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் இருந்த சல்பர் டேங்க் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் சிந்த்கேத்ராஜாவில் வசித்து வந்த அசோக் தேஜ்ராவ் தேஷ்முக் (56) மற்றும் பார்த்தூரில் வசித்து வந்த அப்பாசாகேப் சங்கர் பார்கே (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.