பீகாரில் குரங்குகள் சண்டையால் ரெயில் சேவை பாதிப்பு


பீகாரில் குரங்குகள் சண்டையால் ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2024 9:02 PM IST (Updated: 9 Dec 2024 2:29 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் குரங்குகள் சண்டையால் சுமார் 15 நிமிடங்களுக்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பாட்னா,

பிகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் ரெயில் நிலையத்தில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அங்கு குரங்குகளால் தாக்கப்பட்டு சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகார்கள் வரும்போது வனத்துறையினர் விரைந்து வந்து குரங்குகளை பிடித்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இரண்டு குரங்குகளுக்கு இடையே நடந்த சண்டையால் ரெயில் சேவை பாதிக்கப்பட்ட சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. சமஸ்திபூர் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது நடைமேடையில் 2 குரங்குகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு குரங்கு மீது மற்றொரு குரங்கு ரப்பர் போன்ற ஒரு பொருளை தூக்கி எறிந்தது. அந்த பொருள் அங்குள்ள மின்சார வயரில் உரசி தீப்பிடித்தது.

பின்னர் அந்த வயர் அறுந்து அங்கு நின்றுகொண்டிருந்த ரெயிலின் மீது விழுந்தது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்சார வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சமஸ்திபூர் ரெயில் நிலையத்தில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. குரங்குகளின் சண்டையால் ரெயில் சேவை பாதிக்கப்பட்ட சம்பவம் பீகாரில் பேசுபொருளாகியுள்ளது.


Next Story