லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்
மழை பெய்ததால் தொழிலளி லாரிக்கு அடியில் சென்று படுத்து உறங்கியுள்ளார்.
பெங்களூரு,
ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூருவை சேர்ந்தவர் பசவராஜ். இவர், பெங்களூரு லக்கரேயில் தங்கி இருந்து கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பசவராஜ் இரவு வேலைக்கு சென்றிருந்தார். அதிகாலை 2 மணியளவில் மழை பெய்ததால் பீனியா அருகே பார்லிஜி டோல் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அடியில் சென்று படுத்திருந்தார்.
இந்த நிலையில், பசவராஜ் படுத்து உறங்குவதை கவனிக்காத டிரைவர், லாரியை எடுத்தார். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி பசவராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த பீனியா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பசவராஜின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிப்பதற்காக சென்றிருந்ததும், அந்த சந்தர்ப்பத்தில் மழை பெய்ததால் லாரிக்கு அடியில் சென்று பசவராஜ் படுத்ததும் தெரியவந்தது. மேலும் வேலை பளுவால் அயர்ந்து தூங்கி விட்டதும், இதனை கவனிக்காமல் டிரைவர் லாரியை இயக்கியதால் அவர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானதும் தெரியவந்தது. இதுகுறித்து பீனியா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.