மந்திரி பதவியில் இருந்து நீக்கினாலும் கவலையில்லை- சுரேஷ் கோபி
திரைப்படங்களில் நடிப்பதன் மூலம், தன்னை மந்திரி பதவியிலிருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று மத்திய மந்திரி சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளத்தில் நடைபெற்ற கேரள திரைப்பட வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சியில் நடிகரும் மத்திய மந்திரியுமான சுரேஷ் கோபி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசியதாவது:- நான் 20 முதல் 22 படங்களின் திரைக்கதையை கேட்டபிறகு, அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது குறித்து, திரைப்படங்களில் நடிக்க மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் அனுமதி கோரினேன். எத்தனை படங்கள்? என்று கேட்டார். நான் 22 என்று கூறினேன். அதைக் கேட்ட அமித் ஷா, எனது கோரிக்கை கடிதத்தை ஒதுக்கி வைத்தார். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினார்.
எப்படி இருந்தாலும் நான் செப்டம்பர் 6 ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குவேன். என்னுடைய மந்திரி பதவியின் கடமைகளை நிறைவேற்ற, படப்பிடிப்பு இடங்களுக்கு, அமைச்சகத்திலிருந்து மூன்று அல்லது நான்கு அதிகாரிகளை என்னுடன் அழைத்து வருவேன். அதற்கேற்றவாறு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நான் படங்களில் நடிப்பதற்காக, என்னை மந்திரி பதவியிலிருந்து நீக்கினாலும் கவலையில்லை. நான் காப்பாற்றப்பட்டதாகத் தான் கருதுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். மந்திரியாக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு ஒருபோதும் இல்லை' என்று தெரிவித்தார்.