சத்தீஸ்கார்: 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
ராய்ப்பூர்,
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கார் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
அந்த வகையில், சத்தீஸ்கார் மாநிலம் பிஜப்பூரின் இந்திராவதி தேசியப் பூங்காவின் எல்லைக்குட்பட்ட காடுகளில் இன்று காலை மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அப்போது இருதரப்புக்கும் மத்தியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. தாக்குதல் நின்றபின்னர் நக்சலைட்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் சென்று பார்த்தப்போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுகளும் அவர்களது படையின் சீருடையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து அதி நவீன துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது. சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு நக்சலைட்டுகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.