'எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து குறை சொல்கிறார்கள்' - அமித்ஷா


எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து குறை சொல்கிறார்கள் - அமித்ஷா
x

தனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து எதிர்க்கட்சிகள் குறை சொல்வதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அமித்ஷா விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து குறை சொல்கிறார்கள். எனது பேச்சை திரித்து கூறுகிறார்கள். நான் பேசியதை முழுமையாக கேளுங்கள். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ்தான் 2 முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. அம்பேத்கர் பற்றி நேரு குறை கூறியிருக்கிறார்.

பா.ஜ.க.வும், மோடி அரசும்தான் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கிறது. பா.ஜ.க.வினர் அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுகிறார்கள். நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள். அம்பேத்கரின் வரலாற்று புகழை உலகம் முழுவதும் நிலைநாட்டியது பா.ஜ.க. அரசுதான். காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள்.

எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திய அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சி ஒதுக்கிவைத்தது. நமது நாட்டின் ராணுவத்தினரை கூட காங்கிரஸ் எப்போதும் அவமதித்தே வருகிறது. இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் அந்நிய மண்ணில் காங்கிரஸ் கருத்து தெரிவித்து வருகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை கூட காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிந்தது. பா.ஜ.க. அரசுதான் அம்பேத்கரின் சட்டங்களை அமல்படுத்துகிறது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்வது பா.ஜ.க. அரசுதான்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Next Story