'எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என மத்திய மந்திரி சொல்கிறார்' - திருச்சி சிவா எம்.பி.
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என மத்திய மந்திரி சொல்வதாக திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பது இல்லை என திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி சொல்கிறார். மக்கள் இவர்களுக்கு பெரும்பான்மை கூட தராமல் ஆட்சி நடத்துவதற்கு மட்டும்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம்.
எங்களைப் பற்றி இப்படி பேசுவதற்கு இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தார்கள்? இது மட்டுமின்றி மத்திய மந்திரி ஜே.பி.நட்டா இன்று சோனியா காந்தி குறித்தும், காங்கிரஸ் குறித்தும் கடுமையான வார்த்தைகளை பேசினார். எல்லாம் அவைக்குறிப்பில் பதிவாகி இருக்கின்றன.
அதே சமயம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரை பேச ஒருமுறை கூட அனுமதிக்கவில்லை. விஸ்வாமித்திரர் திரும்பி இருப்பதை போல் அவையின் துணை தலைவர் எங்கள் பக்கமே திரும்புவதில்லை. நாங்கள் கத்தி பார்தோம், கையை உயர்த்தி பார்த்தோம். ஆனால் அவையை நாளை வரை ஒத்திவைத்துவிட்டு போய்விட்டார்கள்."
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.