காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது


காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது
x

காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கர்நாடகாவில் கூடுகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் 26-ந் தேதி (நாளை) பகல் 2.30 மணிக்கு கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள மகாத்மா காந்தி நகரில் நடக்கிறது. அதற்கு 'நவ சத்தியாகிரக சந்திப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

காரிய கமிட்டி கூட்டத்தில், சட்ட மேதை அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நீக்கக்கோரியும், மன்னிப்பு கேட்கக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும், அடுத்த ஆண்டுக்கான காங்கிரசின் செயல் திட்டம் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பா.ஜனதா ஆட்சியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜனநாயகத்தின் சீரழிவு, நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற சவால்கள் குறித்து பேசப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1924-ம் ஆண்டு அதே நகரில் மகாத்மா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்து, காங்கிரஸ் மாநாட்டை நடத்தினார். அதன் நூற்றாண்டையொட்டி, அங்கு (கர்நாடகாவில்) காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story