கவிதாவின் ஜாமீன் குறித்த கருத்து: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்த ரேவந்த் ரெட்டி
கவிதாவின் ஜாமீன் குறித்து ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்,
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா நிபந்தனை ஜாமீனில் சமீபத்தில் வெளியே வந்தார். கவிதாவின் ஜாமீன் குறித்து தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதில், "நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல மேடைகளில் பேசியிருந்தோம். இதற்கு சந்திரசேகர ராவ் உட்பட பலர் மறுப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது கவிதா ஜாமீனில் வெளியே வந்தது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
ஏனெனில், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவிற்கு 15 மாதம் கழித்து தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கவிதாவிற்கு வெறும் 5 மாதங்களிலேயே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும்" என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. தங்களின் தனிப்பட்ட கருத்திற்கு நீதிமன்றத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். நாங்கள் எப்படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற விஷயங்களில் தலையிடாமல் உள்ளோமோ அதே போன்று நீங்களும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
இது பொறுப்புள்ள ஒரு முதல்-மந்திரி பதவியில் இருப்பவர் பேசும் பேச்சாக இல்லை. நாங்கள் தீர்ப்பு அளிக்கும் போது கட்சிகளை கேட்டுதான் தீர்ப்பளிக்க வேண்டுமா? நாங்கள் எங்கள் மனசாட்சி படியும், சட்டப்படியும்தான் தீர்ப்பளிக்கிறோம் என்று நீதிபதிகள் பிகே.மிஸ்ரா, கே.வி. விசுவநாதன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரேவந்த் ரெட்டி தனது கருத்துக்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"இந்திய நீதித்துறை மீது எனக்கு மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் உள்ளது. ஆகஸ்ட் 29, 2024 அன்று சில பத்திரிகைகளில் நான் கூறியதாக வெளியான செய்திகள், நீதிமன்றத்தையும், நீதித்துறையின் ஞானத்தையும் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பத்திரிகைகளில் வெளியான அந்தச் செய்திகளுக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை மீதும், அதன் சுதந்திரமான செயல்பாடு மீதும் எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.