சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு
பாலியல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
புதுடெல்லி,
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு சிறுவன் மீது புகார் கொடுக்க சிறுமியின் பெற்றோர், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர். சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் சென்னை காவல்துறையினரே விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.