கல்லூரியில் மது குடிக்க வைத்து ராகிங், சஸ்பெண்டு... தூக்கு போட்டு மாணவர் தற்கொலை


கல்லூரியில் மது குடிக்க வைத்து ராகிங், சஸ்பெண்டு... தூக்கு போட்டு மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Aug 2024 4:10 PM GMT (Updated: 26 Aug 2024 4:27 PM GMT)

கேரளாவில் கல்லூரி மாணவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்த விவகாரத்தில், 4 மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய உறவினர்கள் வலியுறுத்தினர்.

கோவளம்,

கேரளாவில் கோவளம் நகரில் வெள்ளார் சந்திப்பு பகுதியருகே கைதவிலா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பிஜித் குமார் (வயது 18). இவருடைய தந்தை பிஜு தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். பிஜு மற்றும் தலிமோல் தம்பதியின் மகனான பிஜித், எம்.ஜி. பொறியியல் கல்லூரியில் பல கனவுகளுடன் படிக்க சென்றிருக்கிறார்.

அவர், கணினி மின்சார பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். மதிய உணவு இடைவேளையின்போது, சக மாணவர்கள் 3 பேர் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவை சேர்ந்த மற்றொரு மாணவர் என 4 பேர் அவரை தனியான பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவர் எதிர்ப்பு தெரிவித்தும் கட்டாயப்படுத்தி நண்பர்களான அவர்கள் மது குடிக்க வைத்து உள்ளனர். இதன்பின் வகுப்புக்கு திரும்பினர். ஆனால், பிஜித்துக்கு மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதுபற்றி கல்லூரி நிர்வாகிகளுக்கு மதியம் 2.30 மணியளவில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, பிஜித் மற்றும் 4 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 4 மாணவர்களின் பெற்றோரை நேரில் வரும்படி கல்லூரி சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த வேதனையில், வீட்டுக்கு திரும்பிய பிஜித், அவருடைய தாயார் மற்றும் சகோதரி பிஜித்ராவிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதன்பின் குளியலறைக்கு சென்ற பிஜித் கதவை உள்புறம் பூட்டி கொண்டார். நீண்டநேரம் வெளியே வரவில்லை.

இதனால், குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி அறிந்து, வீட்டுக்கு வந்த பிஜு, குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தூக்கு போட்டு பிஜித் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

திருவல்லம் போலீசார் உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அது நடந்து முடிந்ததும், பிஜித் உடலை எடுத்து கொண்டு கல்லூரிக்கு சென்று அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனை ராகிங் செய்துள்ளனர் என குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

அந்த 4 மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என போலீசார் அளித்த உறுதியை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

கல்லூரியில் படிக்க சென்ற இடத்தில், சக மாணவர்களின் செயலால் உடன் படித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story