வயநாட்டில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 405 ஆக உயர்வு- 7 வது நாளாக மீட்பு பணி


தினத்தந்தி 5 Aug 2024 9:32 AM IST (Updated: 5 Aug 2024 5:57 PM IST)
t-max-icont-min-icon

மேப்பாடியில் முகாம்களாக செயல்படும் 10 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் இன்றும் நீடித்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 405-ஆக உயர்ந்துள்ளது. 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேப்பாடியில் முகாம்களாக செயல்படும் 10 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

Live Updates

  • நிலச்சரிவு உயிரிழப்பு 405ஆக உயர்வு
    5 Aug 2024 5:48 PM IST

    நிலச்சரிவு உயிரிழப்பு 405ஆக உயர்வு

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்தோரின் உடல்கள் நிலம்பூர், சாலியாறு பகுதியில் மீட்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட உடல்களுக்கு டின்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அழுகிய நிலையில் மீட்கப்படும் உடல்கள், பாகங்களை நிலம்பூர் பகுதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 224 சடலங்களும் 181 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத 27 பேரின் உடல்கள், 153 உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 36 உடல்கள் புத்துமலை அருகே ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 256 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

  • 5 Aug 2024 2:50 PM IST

    மீட்புப்பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்: வயநாடு கலெக்டர்

    வயநாடு மீட்புப்பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்பும் தன்னார்வ அணிகள் கூகுள் படிவ இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்பவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவைக்கேற்ப அழைக்கப்படுவர்.

  • 5 Aug 2024 2:38 PM IST

    வயநாடு நிலச்சரிவு: ஆடையாளம் தெரியாத 31 உடல்கள் மீட்டு நல்லடக்கம்

    வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினரால் கண்டெடுக்கப்பட்ட 31 ஆடையாளம் தெரியாத உடல்களை இன்று நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

  • 5 Aug 2024 1:44 PM IST

    சூரல்மலை, முண்டக்கை பகுதியில் 7 சொகுசு விடுதிகள் முற்றிலும் காணாமல் போன நிலையில், மாயமான சுற்றுலா பயணிகளை ராணுவம் தலைமையிலான மீட்பு குழு தேடி வருகிறது.

  • 5 Aug 2024 12:41 PM IST

    வயநாடு நிலச்சரிவு: மீட்புப்படை வீரர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு வினியோகம்

    வயநாடு நிலச்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய நேரத்தில் உணவளிப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு டிரோன்கள் மூலம் உணவு வினியோகிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • 5 Aug 2024 10:22 AM IST

    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு சமைத்து தர தடை விதித்த நிலையில், அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள் தரப்பில் கொடுத்த உணவால் வீரர்களுக்கு புட் பாய்சன் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.


Next Story