மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்; டெல்லி மந்திரிசபை ஒப்புதல் - ஜே.பி.நட்டா தகவல்

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய டெல்லி மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 48 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியமைத்த நிலையில், டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்றார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்த நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க., டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தது.
இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் டெல்லி மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும், 'மகிளா சம்ரித்தி யோஜனா' திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.5,100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, "தேசத்தின் தலைநகரில் பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றியானது மகளிரின் ஆதரவு இல்லாமல் சாத்தியமாகி இருக்காது. டெல்லியில் பெண்கள் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள் தொடங்கிவிட்டன.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய டெல்லி மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்."
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.