86 வயது பெண்ணிடம் ரூ.20 கோடி பணம் பறிக்கப்பட்ட விவகாரம்: பரபரப்பு தகவல்கள்


86 வயது பெண்ணிடம் ரூ.20 கோடி பணம் பறிக்கப்பட்ட விவகாரம்: பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 20 March 2025 2:31 PM (Updated: 20 March 2025 4:07 PM)
t-max-icont-min-icon

டிஜிட்டல் கைது மூலம் 86 வயது பெண்ணிடம் ரூ.20 கோடி பணம் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மும்பை,

டிஜிட்டல் கைது மூலம் நூதன முறையில் பணம் பறிக்கும் மோசடி அதிகரித்து வருகிறது.வீடுகளில் தனியாக இருக்கும் வசதி படைத்த முதியவர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி வருகிறது. இதில் மும்பையை சேர்ந்த 86 வயது பணக்கார பெண்ணும் ஏமாற்றப்பட்டு ரூ. 20 கோடி வரை பணத்தை இழந்துள்ளார்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவன் தனது பெயர் சந்தீப்ராவ் என்றும்,சி.பி.ஐ. அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டான்.

பின்னர் அவன் அந்த பெண்ணிடம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக விமான கம்பெனி உரிமையாளர் ஒருவருக்கு பணபரிமாற்றம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என கூறினார். இதை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அது போன்ற பணபரிவர்த்தனையில் தான் ஈடுபடவில்லை என கூறினார்.

ஆனால் அந்த மர்ம நபரோ இ கோர்ட்டு மூலம் உங்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனால் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது. நாங்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்.இல்லையென்றால் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நீங்கள் மட்டுமல்ல உங்கள் குழந்தைகளையும் கைது செய்வோம் என்று மிரட்டினார்மேலும் வங்கி கணக்குகள் முடக்கப்படும். போலீசார் உங்கள் வீடு தேடி வருவார்கள் என்றும் மிரட்டல் விடுத்தார்.ராஜுவ் ரஞ்சன் என்ற பெயரில் மற்றொரு மர்மநபரும் அந்த பெண்ணை 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தொடர்பு கொண்டு அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்தபடி இருந்தார்.

விசாரணை நடந்து வருவதால் தங்கள் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய அதன் விவரங்களை போலி நீதிமன்ற கணக்குக்கு அனுப்பி வைக்குமாறு பெண்ணிடம் கூறினார்கள். விசாரணை முடிந்ததும் அந்த பணத்தை திரும்பி அனுப்பி விடுவதாகவும் தெரிவித்தனர். இதை நம்பி அந்த பெண்ணும் வங்கி கணக்குகள் விவரங்களை அனுப்பி வைத்தார். இப்படி தொடர்ந்து 2 மாதங்களாக அவர்கள் அந்த பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து டிஜிட்டல் கைது மூலம் ரூ. 20 கோடி வரை பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது.இந்த மோசடி தொடர்பாக அவர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மும்பை மலாடு பகுதியை சேர்ந்த ஷியான் ஷேக் ( வயது20 ) மற்றும் மீரா ரோட்டை சேர்ந்த ராஜூவ் பட் (20) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story