சத்தீஷ்காரில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்தினருக்கு சத்தீஷ்கார் மாநில அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர பத்திரிகையாளரான முகேஷ் சந்திரகர் (33), கடந்த 1-ந்தேதி காணாமல் போன நிலையில், கடந்த 3-ந்தேதி அவரது சடலம் சத்தன்பரா பஸ்தி பகுதியில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வழக்கின் முக்கிய குற்றவாளி சுரேஷ் சந்திரகரை ஐதரபாத்தில் வைத்து கடந்த 5-ந்தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரிதேஷ் சந்திரகர், தினேஷ் சந்திரகர் மற்றும் மகேந்திரா ராம்டேகே ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிஜப்பூரில் கட்டிட ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் மேற்கொண்டு வந்த சாலைப் பணியில் ஊழல் நடைபெற்றதாக பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகர் செய்தி வெளியிட்டதாகவும், இதனால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் சுரேஷ் சந்திரகர் இந்த கொலையை செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என சத்தீஷ்கார் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பத்திரிக்கையாளர்களுக்கான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு, அதற்கு முகேஷ் சந்திரகரின் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.