ராஜஸ்தான்: யு.பி.எஸ்.சி. பயிற்சி மாணவர் மர்ம மரணம்
டெல்லியில் யு.பி.எஸ்.சி. பயிற்சி மாணவர் ஒருவர், வன பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
தவுசா,
ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் இருந்து டெல்லியில் யு.பி.எஸ்.சி. படிப்புக்கான பயிற்சியை மேற்கொள்வதற்காக தீபக் குமார் மீனா என்ற இளைஞர் சென்றிருக்கிறார். அவரை பல நாட்களாக காணவில்லை. இந்நிலையில், டெல்லியில் உள்ள முகர்ஜி நகரில் வன பகுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபக்கின் உடல் கிடைத்துள்ளது.
இதனை கைப்பற்றிய போலீசார், தீபக் தற்கொலை செய்து இருக்க கூடும் என தெரிவித்து உள்ளனர். கடந்த ஜூலையில், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதற்காக அதற்கு பயிற்சி மேற்கொள்ள அவர் டெல்லிக்கு சென்றிருக்கிறார். இதுபற்றி தீபக்கின் தந்தை சி.எல். மீனா கூறும்போது, ஒவ்வொரு நாள் மாலையிலும் தீபக் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவான். கடந்த 10-ந்தேதி கடைசியாக பேசினான்.
அதன்பின் 3 நாட்களாக தொடர்பு கொள்ளவில்லை என்றார். இதனால், தீபக்கின் தந்தை டெல்லிக்கு சென்று மகனை தேடியுள்ளார். தீபக்கின் தங்கும் விடுதிக்கு சென்றபோது, தீபக்கின் அறையில் தங்கி இருந்த சக மாணவர்கள், 2 நாட்களாக தீபக் அறைக்கு திரும்பவில்லை என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, முகர்ஜி நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த சூழலில், தீபக் படித்து வந்த பயிற்சி மையத்திற்கு அருகே வன பகுதியில் இருந்து அவருடைய உடலை போலீசார் மீட்டனர். வகுப்பு முடிந்த பின்னர், வன பகுதிக்கு அவர் சென்றிருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். தீபக் தூக்கில் தொங்கிய மரத்தில் அவருடைய பையும் தொங்கி கொண்டிருந்தது. தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னர் தீபக்கின் உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், இந்த சம்பவத்தில் பயிற்சி மாணவர் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான சான்றுகளாக சம்பவ பகுதியில் உள்ள விஷயங்கள் வலைதளங்களில் சுட்டி காட்டப்பட்டு உள்ளன. அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.