இடஒதுக்கீடு குறித்த ஆபத்தான கருத்துகளுக்காக ராகுல் காந்தியின் நாக்கில் சூடு வைக்க வேண்டும்: பாஜக எம்பி பாண்டே
நாக்கை அறுக்கும் மொழி முறையல்ல, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ராகுல் கூறியது ஆபத்தானது என பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.
மும்பை,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்கா சென்றார். அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது இந்தியாவில் இடஒதுக்கீடு தொடர்பாக ராகுல்காந்தியிடம் நெறியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து காங்கிரஸ் யோசிக்கும் என்றார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் தாக்கி பேசியது சர்ச்சையானது. இதற்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதற்கிடையே ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுவோருக்கு 11 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று சிவ சேனா எம்.எல்.ஏ. கெய்க்வாட் கூறியது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியது ஆபத்தானது என்பதால் அவரது நாக்கில் சூடு வைக்க வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் அனில் பாண்டே கூறியுள்ளார்.
ராகுல்காந்தியின் செயல் குறித்து கெய்க்வாட் கூறியதற்கு பதிலளித்த பாஜக எம்பி பாண்டே, "நாக்கை அறுக்கும் மொழி முறையல்ல, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ராகுல் காந்தி கூறியது ஆபத்தானது. எனவே, வெளிநாட்டில் யாராவது அபத்தமாக பேசினால், அவரது நாக்கை அறுப்பதை விட, அதற்கு சூடு வைக்க வேண்டும்" என்று கூறினார்.