உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ராகுல் காந்தி வாழ்த்து


உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
x

உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ். நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்று வந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டி இன்று பிற்பகலில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டிராவை நோக்கியே போட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்றும் எதிர்பாரா வகையில், 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியர்களை பெருமைப்படுத்திவிட்டாய் குகேஷ்..! மிகவும் இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளாய். அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை எங்களுக்கு நீ நிரூபித்துவிட்டாய்.. வாழ்த்துகள் சாம்பியன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story