மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் ராகுல் காந்தி சந்திப்பு


மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் ராகுல் காந்தி சந்திப்பு
x

Image courtesy: X

தினத்தந்தி 21 Aug 2024 8:52 AM GMT (Updated: 21 Aug 2024 10:20 AM GMT)

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார்.

புதுடெல்லி,

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். மலேசிய பிரதமா் அன்வா் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தாா்.

கடந்த 2022ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும். டெல்லியில் உள்ள பிரதமா் மோடி இல்லத்தில், மோடி - அன்வா் இப்ராகிம் இடையே நேற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா். பின்னா் இருவரும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது,மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் சந்தித்துப் பேசியுள்ளார். இரு நாடுகளில் உள்ள பிரச்சினைகள், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story