குஜராத்தில் விமான உற்பத்தி ஆலை: பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் இணைந்து திறந்து வைத்தனர்


குஜராத்தில் விமான  உற்பத்தி ஆலை: பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் இணைந்து திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 28 Oct 2024 11:44 AM IST (Updated: 28 Oct 2024 1:27 PM IST)
t-max-icont-min-icon

வதோதராவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியும், பெட்ரோ சான்செஸும் வாகனப் பேரணியில் பங்கேற்றனர்.

காந்திநகர்,

குஜராத்தின் வதோதராவில் இந்திய ராணுவ விமானங்களை தயாரிக்கும் டாடா விமான உற்பத்தி ஆலை உள்ளது. இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார். இந்தநிலையில், இன்று காலை வதோதராவுக்கு வருகை தந்த மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் வாகனப் பேரணியில் பங்கேற்றனர். இவர்களுக்கு வதோதரா மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் கூடி நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.



பின்னர், வதோதராவில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிட். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா விமான ஆலையை இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.

மொத்தம் 56 சி-295 விமானங்கள் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டிஏஎஸ்எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.

ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கும்.


Next Story