உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி


உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Dec 2024 7:17 PM IST (Updated: 28 Dec 2024 7:20 PM IST)
t-max-icont-min-icon

உலக செஸ் சாம்பியன் குகேஷை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி,

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை 18 வயதான குகேஷ் பெற்றார். இவருக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும் அவருக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

மேலும் சாம்பியன் குகேஷுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன் குகேஷை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

அப்போது குகேஷ், பிரதமர் மோடிக்கு தான் மற்றும் டிங் லிரேன் கையெழுத்திட்ட இறுதிப்போட்டியில் விளையாடிய செஸ் போர்டை நினைவு பரிசாக வழங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், " செஸ் சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான குகேஷ் உடன் எனக்கு சிறந்த தொடர்பு இருக்கிறது! நான் சில வருடங்களாக அவருடன் நெருக்கமாகப் பழகி வருகிறேன், அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது உறுதியும் அர்ப்பணிப்பும்தான்.

அவரது தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இளைய உலக செஸ் சாம்பியனாக வருவேன் என்று அவர் கூறிய ஒரு வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது சொந்த முயற்சிகளால் இப்போது அந்த கணிப்பு நிறைவேறியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story