ஐ.சி.சி. தலைவராக போட்டியின்றி தேர்வான ஜெய் ஷா... விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்


ஐ.சி.சி. தலைவராக போட்டியின்றி தேர்வான ஜெய் ஷா... விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்
x
தினத்தந்தி 29 Aug 2024 1:15 PM IST (Updated: 29 Aug 2024 1:48 PM IST)
t-max-icont-min-icon

ஐ.சி.சி. தலைவராக போட்டியின்றி தேர்வான ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவுரவ செயலாளரான ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (ICC) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை ஐ.சி.சி. தலைவராக இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், மூன்றாவது முறையாக தனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெய் ஷா போட்டியின்றி புதிய தலைவராக தேர்வாகி உள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனான ஜெய் ஷா (35) மிகக் குறைந்த வயதிலேயே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்படி ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா வருகிற டிசம்பர் 1-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். மறைந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐ.சி..சி தலைவர் பொறுப்பை கவனிக்கும் ஐந்தாவது இந்தியராகி உள்ளார் ஜெய் ஷா. இதையொட்டி பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் வாழ்த்து பதிவினை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக விராட் கோலியின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், "ஐ.சி.சி. தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, பேட்ஸ்மேன்... பவுலர்... விக்கெட் கீப்பர்... பீல்டர்... மற்றும் ஆல்ரவுண்ட்... இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த லெஜண்டிற்கு அனைவரும் கைத்தட்டல் அளிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story