3வது முறையாக விமான டிக்கெட் பதிவு செய்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா...நாடு திரும்புவாரா?


Prajwal Revanna
x
தினத்தந்தி 29 May 2024 8:37 AM GMT (Updated: 29 May 2024 10:17 AM GMT)

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ. எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார்.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார்.

இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேவேளை, ரேவண்ணா ஜெர்மனி தப்பிச்சென்றதாக தகவல் வெளியான நிலையில் அவரை கைது செய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதேவேளை, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்காக சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

என் மீதான புகார்கள் தொடர்பாக வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளேன். கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீதான போலி வழக்குகளில் இருந்து கோர்ட்டு வாயிலாக நான் மீண்டு வருவேன். கடவுள், மக்கள், குடும்பத்தினர் என்னை ஆசீர்வதிக்கட்டும். சிறப்பு விசாரணை குழு முன் வரும் 31ம் தேதி நான் நிச்சயம் ஆஜராவேன். விசாரணைக்கு வந்தபின் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நான் முயற்சிப்பேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா நாளை ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஜெர்மனியின் முனிச் நகரிலிருந்து, பெங்களூருக்கு வர விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகவும், தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூருவில் தரையிறங்கும் பிரஜ்வல் ரேவண்ணாவை, விமனா நிலையத்திலேயே கைது செய்ய எஸ்.ஐ.டி. முடிவு செய்துள்ளது. இதற்காக இப்போது முதலே பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹாசன் தொகுதியில் உள்ள பிரஜ்வலின் வீட்டில் நேற்று எஸ்.ஐ.டி. நடத்திய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, இரண்டு முறை விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story